கொள்கை பிடிப்பு

6:00 பிப இல் மே 17, 2007 | கவிதை இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

பிடிப்பாய் இருப்பதாய்
சத்தியம் செய்தே பிடி கொடுக்கப்பட்டது
இறுக்கமாய் இருத்தல் நடைமுறையல்லவென
இறுக்கம் சற்று தளர்த்ததப்பட்டது
உறவெனும் கோணங்களின் உரசலில் கொஞ்சம்
உடைந்து போனது பிடி
பொருளின் தேவை கூட பிடியின்
பிடிப்பு இன்னும் தளர்ந்தது
வேட்டியின் நுனி ஒட்டும் உலர் மண்ணாய்
வேடம் பூண்ட பிடிப்பு உண்டு
உதறி போனால் ஒடி போகும் நிலை கொண்டு
மூளையின் மடிப்பில் மறைந்து போனது
நாக்கின் நகர்தலில் அமர்ந்து கொண்டது
இன்னமும் சொல்லிக் கொள்ளதான் ஆசை
கொள்கை வீரன் நாங்களென

நிரந்தரம்

5:51 பிப இல் மே 17, 2007 | கவிதை இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

நிரந்தரம் தேவைபடுகின்றது
உளவியல் ரீதியில் உள்ளுக்குள்
பரவும் பாதரசமாய் வழுக்குதல்
சுகித்தாலும் நிரந்தரமே நிச்சயமாகின்றது
உறவிலே பொருளிலே நிரந்தரமாய்
நிரந்தரத்தின் தேவை உண்டு
எழுதப்படாத வாக்குறுதிகளின்
எதிர்பார்ப்பு என்றும் உண்டு

மன்னனின் மகன்

4:12 பிப இல் மே 15, 2007 | கவிதை இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

மக்களாட்சி போர்வையில்
மன்னனுக்கு மகனாய் இருத்தல் சுகமே
வெறியாயாட்டம் வீரமாகவும் காட்டப்படலாம்
புறநானுறாய் பேசும் புலவர் கொம்பும் சீவலாம்
அதிகாரத்தின் நுனி கொம்பில் வேதாளமாய்
ஆட்டமிடுகையில் வாக்களித்தவன் கிறுக்கனே

வெறியாட்டம் முடித்து இளைப்பாற
மக்கள் கூடத்தின் மத்தியில்
ஒப்பாரி ஒலி கொண்ட இழவு வீட்டின் முதுகேறி
ஒய்யாரமாய் பொன்விழா எடுத்து முதுகும் சொறியலாம்
மாறு வேடமின்றி மன கூச்சமின்றி
மன்னவன் மகனும் பார்வைகூடத்தில்
இருக்கை அமைத்து பார்த்தும் ரசிக்கலாம்
வாழ்க மக்களாட்சி வாழ்க பகுத்தறிவு

சாமான்யனாய் இருத்தலும்
சாக்கடையாய் இருத்தலும் ஒன்றே
வீச்சம் கூடும் போதே நாசிக்கு தெரியும்
கொஞ்சம் மருந்தடித்தால் மறந்து போகும்
செத்தவன் குடும்பத்துக்கு சில்லறை மருந்து

பொன்விழா பெருமையிலும்
கொண்டாட குதூகலத்திலும்
குடும்ப சண்டை இரைச்சலிலும்
எலும்புத்துண்டினை கண்ட மிருகத்தின்
எழுச்சியில் மந்தை இயங்க
காலில் மிதிப்பட்ட சாணி துடைக்கும்
இலாவகத்தில் இறந்தவன் செய்தி
துடைக்கப்படுகின்றது
கரைகளை கண்டு கவலைபடாதீர்கள்
அவை மக்களாட்சி மகாட்சவத்தின் ரேகைகள்

பகுத்தறிவுள்ள பகலவன்
எம்மன்னவன் சொல்வது இதுவே
வாழ்வது மன்னனாய் இருக்கும்
வரை வீழ்பவன் உதிரும் ரோமமே

தகவல்

5:46 பிப இல் மே 9, 2007 | டைரி குறிப்பு இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

மிக்ஸில போட்டு மாவு அரைக்கரது போல தலைக்குள்ள அழகிரி/மாறன் யுத்தம், நமீதா விஜய்காக்க குறைத்து கொண்ட பன்னிரென்டு கிலோ, இரண்டு வயதுக்கு முன்னால டிவி குழந்தைகளுக்கு காட்ட கூடாதுனு சொன்ன ரேடியோ செய்தி எல்லாத்தையையும் போட்டு ஒரு அரவை கொடுத்தா வீட்டுலேருந்து ஆபிஸ் வந்திடுது. வழக்கமான சிரிப்பு, மற்றும் சில்லரை வேலைகள் எல்லாம் ஒட்டி விட்டு கொஞ்சம் பாஸ்கட்பால் செய்திகள் கொறிப்பு. நிறைய தகவல்கள் குவிஞ்சு கிடக்கு. படிக்க படிக்க இன்பம்.

தகவல் எவ்வளவு முக்கியம். எவ்வளவு விரைவா பறிமாற்றி கொள்ள படுதுனு பார்த்தா ஆச்சரியமாதான் இருக்கு. சைக்கிள் கேப்பில தகவல் ஒரு புள்ளியில இருந்து பத்து புள்ளிகளுக்கு பரவுது. பத்து பதினைந்து வருஷத்துக்கு முன்னால இதெல்லாம் சாத்தியபடுமுனு கூட நினைச்சு பார்த்ததில்ல. அப்பவும் எதிர்காலத்தை பத்தி சிந்திக்க சொன்னா வித்தியாசமான உடைகள்ல மாத்திரை தின்னுகிட்டு ராக்கெட்டில பறக்கறததான் யோசிக்க முடிஞ்சது. தகவலோட முக்கியத்தையோ அதை பறிமாறிக் கொள்வதில் சுலபம் கிட்டுவதால் உண்டாகும் வசதிகளை பற்றியோ யோசிச்சதில்லை.

உலவாயி

3:33 பிப இல் மே 7, 2007 | கவிதை இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

உலவாயி அழைக்கின்றாள்
ஆவேசமாய் சில நேரமும்
பாசமாய் சில நேரமும்
பசியோடு சில நேரமும்
மாடமாளிகை கூரை கோபுரமுள்ள
வெறும் கல்லான சாமியல்ல அவள்
எங்கள் மக்களின்
கனவு வழி சஞ்சாரியவள்
பூசாரியின் உடுக்கொலியில் அவள்
பேச்சிருக்கும்
எங்கள் வீட்டு உலவாயி
என்றைக்கும் உண்டு எங்களோடு.

உலவாயி கோயிலுக்கு அப்பாதான் தற்போதைய பூசாரி. முன்பு தாத்தா பூசாரியாக இருந்தார். நேற்று அண்ணணோடு பேசும் போது தன் மகளை அவர் உலவாயி என கொஞ்சுவதை பார்த்தேன். பல தலைமுறையாக மக்களின் நம்பிக்கையின் வழி உலவாயி வாழ்ந்து வருகின்றாள். உலவாயி கோயிலுக்கு ஏழெட்டு வருடங்களுக்கு முன் சென்றிருக்கின்றேன். அந்த கோவில் ஒரு ஒடு வாய்ந்த வீடு. வரிசையாக இருக்கும் வீடுகளுக்குள் அதுவும் ஒரு வீடாகதான் இருக்கின்றது. அந்த வீட்டினுள் தீட்டிய ஒவியமாய் உலவாயி உண்டு. சிலை கிடையாது. எங்கள் குலதெய்வம் கல்லுபிலிக்குமே உருவம் கிடையாது. கல்லுபிலிக்கு கூரையையும் கிடையாது. பெரும் பாறை ஒன்றில் எண்ணைய் பூசப்பட்டு அதுவே தெய்வமாய் வழிப்பட படுகின்றது. என் தங்கையின் குலதெய்வ கோயிலுக்கும் சென்றிருக்கின்றேன், அதற்குமே உருவ சிலை கிடையாது. சுவற்றோவியமே உண்டு.

உலவாயி வலிமை வாய்ந்த தெய்வமாக கருதப்படுகின்றாள். உலவாயி தன் தேவைகளை தானே மக்கள் கனவில் வந்து சொல்லி சரி செய்து கொள்கின்றாள். மக்களின் பிரச்சனைக்கும் ஆலோசனை வழங்குகின்றாள். கடவுள் நம்பிக்கை அப்பால் வைத்து விட்டு இருக்கும் எனக்கும், அப்பாவுக்கும் இந்த கனவு வழி உரையாடல் குறித்த பேச்சு வரும். அப்பாவிடம் நம்பிக்கை சார்ந்த பேச்சுகளும், செய்திகளும் நிறைய உண்டு. ஊராரின் நம்பிக்கையில்தான் உலவாயி வாழ்கின்றாள் எனதான் எனக்கு தோன்றுகின்றது.

விஷ்ணுபுரம்

3:58 பிப இல் மே 4, 2007 | புனைவு இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்

அந்த புத்தகம் அதன் பல பக்கங்களை புரட்டி கொண்டு இருந்தது. சில பக்கங்கள் மிக வேகமாகவும், சில பக்கங்கள் பல நாட்கள் புரட்டபடாமலும் இருந்தன. புத்தகமே அதற்கு காரணம். புத்தகத்தின் இயக்கம் புலப்பட நாள் பிடித்ததால் பேருந்தின் சன்னல் வழி பார்வை மட்டுமே கொண்டு வாசிக்க முடிந்தது.

*************
அந்த நகரத்தில் மதம் கொண்ட யானைக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு கொண்டிருந்தது. யானை ஒரே குழப்பத்தில் இருந்தது. யானையிலும் குலம் எதும் இருந்திருந்தால் தான் பிழைத்திருக்க வாய்ப்பிருக்குமா எனற ஐயம் கொண்டது. உயர் குல தண்டனைகள் மயிலிறகால் வருடுவதாகவும், தாழ்த்தப்பட்ட குல தண்டனைகள் கழுத்தறுப்பதாகவும் இருந்ததால் அது உயர் குலமாக மாறமுடியுமா என யோசிக்கலாயிற்று.

**************

அஜிதனுக்கும் பவதத்தருக்கும் இடையேயான ஞானசபை போராட்டத்தின் ஊடே வெவ்வேறு மதங்களான மீசாம்சம், சைவம், சமணமும் மற்றும் பௌத்த உட்பிரிவுகளும் தர்க்கமாய் வந்தன. விஷ்ணுபுர கோவிலில் கர்ப்பகிரகத்தின் கதவுகளால் அடைக்கப்பட்டவன் கூச்சல் தாளாது காதுகளை மூடிக் கொள்ள முடிவு செய்தான். செந்தலை பட்டனால் சிறையுண்டவன் இன்னும் கோபமாகதான் இருந்தான்.

*************

விஷ்ணுபுரத்தில் முதலில் செதுக்கிய சிற்பி கற்பனை உள்வாங்கிதான் செதுக்கியிருப்பார். விதிகளோ, மரபுகளோ அவனுக்கு சிலை செதுக்குதலை போதித்து இருக்காது. சிலைகளின் வீரியம் கொடுத்த உணர்வினால் அச்சம் கொண்ட கும்பலே சிற்பிக்கும் விதிகளை, மரபுகளை கொடுத்திருக்க கூடும். தலைமை சிற்பி இப்போதெல்லாம் சிற்பம் செத்து விட்டது என்றே கூறிக் கொள்கிறார்.

*************

சந்திரகீர்த்திக்கு இருப்பு கொள்ளவில்லை. வேத முழக்கம் வேஷம் கட்டும் வீதிகளை பார்க்கையில் நொந்து போய் இருந்தார். ஊட்டு புறைகளில் அனுமதி மறுக்கப்பட்டு விஷ்ணுபுரத்தால் ஒதுக்கப்பட்ட மக்களின் குரல் வேத முழக்கங்களில் விழுங்கப்பட்டு வந்தது. பவதத்தரின் புத்திசாலிதனம் விஷ்ணுபுரமெனும் அதிகார மையத்தை காத்துவந்தது. நாளொரு புராணம் புனையப்பட்டு விஷ்ணுபுர வரலாறாய் மாறி கொண்டிருந்தது. நெடிய மதில்கள் உடைய விஷ்ணுபுரம் அதன் வரலாற்றுக்குள் ஒளிந்து கொண்டிருந்தது.

ஞானசபை இயக்கம் சந்திரகீர்த்திக்கு புலப்பட்டது. பவதத்தரின் வாதிடும் திறமை வேதத்தின் வெற்றியாக நிறுவப்பட்டிருந்தது. அவரின் பலகீனம் அவரது மகனே. உடலெல்லாம் சாம்பல் பூசி சுடுகாட்டு சித்தனாய் ஞானதேடல் கொண்டவன் மரபு, உறவு எல்லாவற்றையும் எரித்து சாம்பல் பொடியாக்கியிருந்தான்.

அஜிதனை முதலில் காஞ்சியில் பார்த்தபோதே அவனுடைய ்பௌத்த அறிவை கண்டு கொண்டார். பற்று அறுக்கும் முனி வெற்றி களிப்பில் பற்றுக் கொண்டதை கண்டதும் சந்திரகீர்த்தியின் மூளை சந்தோஷம் கொண்டது. கிட்டதட்ட சுடுகாட்டு சித்தனை ஒத்த உடலமைப்பும், முகப்பொழிவும் கொண்டிருந்த அஜிதனின் சந்திப்பு பவதத்தனை உலுக்குமென அவருக்கு பட்டது. மூடப்பட்ட கதவுகளை உடைத்து விஷ்ணுவுக்கு விடிவு செய்யும் காலம் அவரின் கண்ணில் பட்டது. வேதங்களிலும் கோவில்களிலும் முடக்கப்பட்ட நகரத்தின் ்செல்வம் எல்லோருக்கும் பயன்படுத்தல் இவன் வழி சாத்தியம் என்று முடிவு செய்தார். விஷ்ணுபுர ஞானசபைக்கு இவனை கொண்டு செல்வது எப்படி என்ற யோசனையில் ஆழ்ந்தார்.

************
ஞானசபை வெற்றி உண்டாக்கிய வெறுமை அஜிதனின் உள்ளும் புறமும் நிரம்பியது. சந்திர கீர்த்தியின் கையில் விஷ்ணுபுர அதிகாரத்தை ஒப்படைத்தில் பளு குறைந்ததாக தெரியவில்லை. வென்றது பௌத்தமா இல்லை தருக்கமா என்ற வினா தந்த பளு மனவெளி நின்றது. வெற்றி என்பது பிறரின் தோல்வியிலா என்ற கேள்வியும் எழுந்து நின்றது. பிறரின் தோல்வியில் சிந்தை சிரிக்கையில் தானும் தோற்றதாகவே பட்டது. துற என்று கூறும் புத்தரின் கொள்கையில் வெற்றி என்பது சேகரிக்கும் பொருள்தான். சேமிக்கையில் துறவி என்ற நிலை எது?

சிற்பியின் உளியாய் சந்திரகீர்த்தி தனை பயன்படுத்தியதால் சந்திரகீர்த்தியிடம் ஒரு பயமும் வந்தது. உளி பூஜிக்கப்பட்டாலும் சுயமாய் இயங்குவது இல்லை. இயக்குபவன் பொருத்தே அதன் காரியம். வடபுலம் வந்த லாமாவின் மரணம் கொடுத்த பயம் இப்போது சந்திரகீர்த்தியினாலும் வந்தது.

வினாக்களுக்கு வயதாக வயதாக விடைகளை தேடுவதை விட விடைகள் தேடி வந்தால் பார்க்கலாம் அஜிதன் முடிவு செய்தான். மௌனித்திருக்க பழகலானான்.

****************
தத்துவங்கள் வெற்றி தோல்வியை எண்ணி உருவாக்கப்படுவதில்லை. தருக்கங்களே வெற்றி தோல்வியை நோக்கி உருவாக்கப்படுகின்றன. தத்துவங்கள் தனி மனித ஆன்மீக தேடல்கள், சமூக தேடல்கள் மேல் உருவாக்கப்படுகின்றது. அவற்றை படைக்கும் மனிதர்களின் அன்றைய காலகட்ட உணர்வுகளை தத்துவங்கள் பிரதிபலிக்கின்றன.
***************

ஆழ்வார் உருவாக்கங்களும், வைஜெயந்தி எனும் குதிரையின் மேல் சுவர்க்கம் பயணித்தலும்
தலைமையை குளிர்விக்க மொழிப்புலமை காட்டும் வராலாற்றாசிரியார்களால் நொடிப்பொழுதில் உருவாக்கப்பட்டுள்ளது. வராலாற்றாய் உருவாகும் புனைவுகள்தான் ஆளும் வர்க்கத்தின் அதிகார பீடத்தினை அலங்காரமாகவும், அஸ்திவாரமாகவும் தாங்கி பிடித்திருந்தன.

***************

அரசனுக்கு ஆன்மீகம் தேவைப்பட்டது. அதற்காக குரு உருவாக்கப்பட்டார். குருவின் கையில் அதிகாரம் வழங்கப்பட்டது. அதிகாரத்தை ்நிலை நிறுத்த ஆலயம் அமைக்கப்பட்டது. அச்சமும், பிரமிப்பும் உருவாக்கும் பிரமாண்டம் ஆலயத்தில் பொதிக்கப்பட்டது. சடங்குகளும், சாத்திரங்களும், மாயா வித்தைகளும் ஆலயத்தின் வழி வந்தன. ஆன்மிகத்தின் ராஜகோபுரமாய் ஞானசபை விவாதம் உண்டு. தத்துவமென தருக்கம் காட்டப்பட்டது. தருக்கத்தின் வெற்றியில் குருவின் ்காலடியில் அரசனோடு மற்ற அனைவரும்.

**************

பெருமூப்பன் புரளும் போதெல்லாம் வசந்தன் எனும் பாணன் அவனை விஷ்ணு என்றே குறிப்பிட்டான். வசந்தனுக்கு விஷ்ணு எனும் தர்க்கம் பிடித்ததால் பெருமூப்பன் விஷ்ணுவானான். வசந்தனுக்கு உங்களையோ என்னையோ பற்றிய தர்க்கம் பிடித்திருந்தால் அவன் நம்மை கூட சொல்லியிருப்பான். விஷ்ணு தத்துவமா தர்க்கமா என வசந்தன் தர்க்கம் கூட செய்வான்.

வசந்தன் எனும் பாணன் முடிக்க மற்றவன் கதையை தொடர்ந்தான். பெருமூப்பனிடத்து மோதி உடையும் தலைகளும், அவனிடத்து விரிந்த கனவுகளும் பெருமூப்பனின் சொத்தே. வசந்தனுக்கு கதை சொல்லி அலுப்பானாதால் தானும் அந்த புத்தகத்தின் பக்கங்களின் வார்த்தைகளாக முடிவு செய்து கொண்டான். கருப்பு நாயினை அவன் தேடி சென்று விட்டான். வசந்தன் போனால் வேறோருவன். தொடர்ந்து மூன்று காண்டங்களும் வாசிக்கப்பட்டு கொண்டே இருக்கும்.

வலியும் பயமும்

5:47 பிப இல் மே 3, 2007 | கவிதை இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

பயம் இருக்கின்றது
வடிவம் இல்லாமல்
ஆனால் ஆள் முழுதும் இருக்கின்றது
ஆடை போல் போர்த்தபடவில்லை
சதை போல் உள் கட்டப்பட்டிருகிறது

துடிக்கும் இதய தசையின் வலியாய்
வெளிச்சம் வர பயம் தெரிந்தது
சில நொடியில் ஆரம்பித்து
சில மணி நேர தரிசனம்
பிள்ளையின் சிரிப்பும்
தோழியின் தவிப்பும்
பாரமாய் தெரிவதும் அந்நொடி சாத்தியமே
எதுவும் நடக்கலாம் என்ற நிதர்சனம் விளங்க
பயத்தின் துடிப்பும் கூடுகின்றது

வலி போனபின்னும் பயத்தின் நிழல் உண்டு
வந்தவை போனவை பற்றிய கணக்குகளின்
புதிய சமன்பாடுகளில் ஒட்டிக் கொண்டு
பயம் வந்த இந்த மணிகளின் நியாபகம்
அமுதசுரபியின் அன்னம் போல் தொடர்ச்சியாய்
என்னோடு உண்டு

மகள்

3:19 பிப இல் ஏப்ரல் 27, 2007 | கவிதை இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்து போன ப்ளாஸ்டிக் துண்டிலும்
சிதறி போன உணவு பொருள்களிலும்
பழசாய் போன அட்டை பெட்டிகளிலும்
ரசிக்க வைக்கும் ரசனைகள் ஒளிந்திருப்பதுண்டு
உணவை கசக்கி சட்டையில் பூசி
கண் பார்த்து சிரிக்கும் கவிதைதான்
ரசனை எனக்கு கற்று தருகின்றது

மக்கள் நலம்

3:04 பிப இல் ஏப்ரல் 27, 2007 | கவிதை இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

எல்லா நேரங்களிலும்
முன் வைக்கப்படும் வாதமாய் மக்கள் நலம்
இசங்களின் இடுக்குகளின் கசடுகள் கூட
இங்கு மக்கள் நலமாய் மாறுவேடம் பூணுகின்றன
மக்களுக்கும் மக்களை பற்றி கவலையில்லை
திருட்டு விசிடி படத்திற்கும் தெருமுனை சிறுநீருக்கும்
நடுவே கொஞ்சம் குறைகள் உண்டு
ஆனால் கவர்ச்சியாய் ஏதேனும் தொட்டுக் கொள்ள
அடுத்து இருப்பினும்
துடைத்து விட்டு கவலை மறந்தொரு வாழ்க்கை
கைகூடுதலும் உண்டு
வெறுப்புணர்வின் உச்சம் புரட்சியாய் போதிக்கப்படுதலுமுண்டு
புரட்டுதன அட்க்குமுறையையும் சமூக தேவையாய் சொல்லபடுதலுமுண்டு
எல்லாரும் முன் சொல்வது மக்கள் நலமே

சொல்லுதல்

4:05 பிப இல் ஏப்ரல் 25, 2007 | கவிதை இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

எது நிச்சயம் எது நிரந்தரம்
என்ன வேடம் இன்றைக்கு
எதுவும் எனதாவது இல்லை
நகரும் ரயிலின் ஒசை போல்
இடைவிடாத லயத்தில் இயக்கம்
ஐம்புலன் அறிவே எனது பார்வை
நிகழ்வுகள் ஐம்புலன் கடந்தவையானால்
நிகழ்வின் விளிம்பினை கொண்டே
நிகழ்வு அளக்கப்படுதல் நிச்சயம்
ஆனாலும் எதாவது ஒரு புள்ளியில்
நின்று எனக்கானதை சொல்லுவேன்

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.